Monday, December 28, 2009

புதிய புத்தகங்கள் : அம்பேத்கர்

‘சிந்திக்காமல், கண்மூடித்தனமாக ஒரு தலைவரது கவர்ச்சியில் மயங்கி அவரைப் பின்பற்றுவது கூடாது. இந்தியாவில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுவது என்பது உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அரசியலில் பெரும்பங்கு வகிக்கிறது. சமய நெறியில் பக்தி, ஆன்ம விடுதலைக்கு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுதல் என்பது நிச்சயமாக ஜனநாயக சாவுக்கு வழிவகுத்து, அதன் விளைவாக சர்வாதிகாரத்துக்கு அழைத்துச்சென்றுவிடும்’ - டாக்டர் அம்பேத்கர்.

இந்த ஆண்டு நான் எழுதிய இரண்டாவது புத்தகம் அம்பேத்கர். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

புதிய புத்தகங்கள் : எம்.ஜி.ஆர்

'இந்தக்கூட்டம் என்னைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. ஏதோ நான் செய்யத் தகாத குற்றங்களைச் செய்துவிட்டது போலவும் அதற்காக என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்திவைத்து, ‘இவர் நல்லவர்’ என்று மக்களை நம்ப வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் போல இருக்கிறது.

இத்தனைக் காலமாக திமுகழகத்தில் இருந்து பாடுபட்ட எனக்கு கழகம் அளித்த பரிசு இதுதானா என்று நினைக்கும்போது... சே... அதை ஏன் நினைக்கவேண்டும்?


எனக்கு முன் பேசிய நண்பர்கள் பலரும் என்னைப் பற்றிப் பேசிய பேச்சுகள் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. வேதனை அளிப்பதாகவே இருந்தன. எனது பணிகளை அறிமுகப்படுத்திவைப்பது போல அவர்கள் பேசினார்கள். பத்து வருஷத்துக்கும் மேலாக கழகத்தில் தொண்டாற்றிய ராமச்சந்திரனை அறிமுகம் செய்துவைக்கவேண்டிய வெட்கங்கெட்ட நிலை வரலாமா?

ஈரோடு சின்னச்சாமி இங்கே பேசினார். இவர் சமீபத்தில் கழகத்துக்கு வந்தவர். அதுவும் என் முயற்சியால் கழகத்தில் சேர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட சின்னச்சாமி என்னை அறிமுகப்படுத்தி வைப்பது போல இங்கே பேசினார். அவர் என்னைப்பற்றி உங்களிடம் சிபாரிசு செய்வதுபோல பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டது ஏன்?

திமுகழகத் தொண்டனான நான் அண்ணாவை அரசியல் வழிகாட்டியாகக் கொண்ட நான் காமராசரை என் தலைவர் என்று சொல்லிவிட்டேனாம்!

உடனே எம்.ஜி.ஆர் காங்கிரஸுக்குப் போய்விடுவார் என்று சிலரும் காமராசரைப் பாராட்டும் எம்.ஜி.ஆருக்குக் கழகத்தில் என்ன வேலை என்று சிலரும் தப்புப் பிரசாரத்தில் இறங்கிவிட்டார்கள்.

காமராசரை காலமெல்லாம் எதிர்த்து வருகிற நான், அவரது பிறந்த நாளன்று அவரது நல்ல குணங்களை எடுத்துச் சொல்லி பாராட்டியதாலேயே காமராசரை ஆதரிப்பவன் என்று பொருள் கொள்வதா?

அப்படியானால் அண்ணா சிறையில் இருந்தபோது கழக வெற்றிக்காக காமராசரை எதிர்த்து கடுமையாக வேலை செய்தேனே.. அப்போது சிறையிலிருந்த அண்ணாவின் விருப்பத்துக்கு விரோதமாக செயல்பட்டது யார்? அப்போது அண்ணாவை எதிர்த்தது யார்? நானா? நன்றாக யோசித்துப் பாருங்கள்.

காமராசரைப் பாராட்டுவது எப்படி ஒரு கட்சியைப் பாராட்டுவது ஆகும்? தனிப்பட்ட மனிதரின் நல்ல குணங்களைப் பாராட்டுவதற்கும் கட்சியைப் பாராட்டுவதற்கும் வித்தியாசம் தெரியாத தொண்டர்கள் நிறைந்ததுதானா தி.மு.கழகம்!

உங்கள் பாராட்டுகளை எதிர்பார்த்து நான் கட்சியில் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. தினந்தோறும் பாராட்டு பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தால் நானும் நாளுக்கு ஒரு அறிக்கைவிட்டு பத்திரிகைகளில் என் பெயர் வந்துகொண்டே இருக்கச் செய்ய முடியும். எனக்கு அந்தத் திறமை இல்லாமல் இல்லை.

இன்னொருவரின் வற்புறுத்தலுக்காக நான் கட்சியில் இருப்பவன் அல்ல. எனக்கு விருப்பம் உள்ள கொள்கைகளுக்காகக் கட்சியில் சேர்ந்தேன். விருப்பமில்லாவிடின் சிறுபொழுதும் நீடிக்கமாட்டேன்.

திடீரென்று எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை; பொதுக்குழுவில் வருகிறது என்று அறிக்கை வந்தது. யார் அறிக்கை விட்டது என்று கேட்டால் பிரமுகர் என்கிறார்கள். அதேபோல எனக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக ஒரு செய்தி. பெயர் சொல்ல தைரியமில்லாத அந்தப் பிரமுகர் யார்? ஆண்டுக்கொரு முறை நான் குழப்பம் செய்வதாக அந்த அறிக்கையில் பிரமுகர் கூறியிருக்கிறார். யார் அந்தப் பிரமுகர்?

தேடித் தேடிப் பார்க்கிறேன். தெரியவில்லை. நாவலரைக் கேட்டேன். மதியையும் கேட்டேன். அவர்களுக்கும் அந்தப் பிரமுகர் யார் என்று தெரியவில்லை. இவர்களுக்கு நோக்கம் என்ன என்பது தெரியவில்லையே? இதை எப்படித் தடுப்பது?

‘எப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம், எப்படித் தூண்டிவிடலாம் என்று அலைகிற இந்த ஐந்தாம் படைகளை விரட்டியாகவேண்டும். ஐந்தாம்படைகளை அகற்றுவதே இனி நமது வேலை.’

0

ஆகஸ்டு 16, 1965 தமிழ்ச்செய்தி நாளிதழில் எம்.ஜி.ஆரின் இந்த ஆவேச உரை இடம்பெற்றுள்ளது. மேலும் பல விவரங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கும் 'வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர், அடியேனே!

Thursday, December 24, 2009

மூன்றெழுத்து மந்திரம்!

Friday, November 27, 2009

இலங்கையின் பர்வேஸ் முஷாரஃப்!

இதுதான் அறுவடைக்காலம் என்பதில் தெளிவாக இருக்கிறார் சரத் ஃபொன்சேகா. நேற்றுவரை மிடுக்கான ராணுவ உடை தரித்து வலம்வந்து கொண்டிருந்த இலங்கையின் முப்படைகளில் தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகளையும் ஈழத்தமிழர் நலனையும் ஒரே குழியில் போட்டுப் புதைத்த உன்னத வீரர் என்று சிங்களர்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான். இந்த புகழ்ச்சி நிறைந்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கைதான் அவரை அரசியலுக்கு அழைத்துவந்திருக்கிறது.

உண்மையில் அவருக்கு அரசியல் ஆர்வமே கிடையாது என்று சொல்லமுடியாது. அவருடைய அடிமனத்துக்குள் லேசுபாசாக ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். அதை வெளிக்கொண்டு வந்த புண்ணியம் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சேவைத்தான் சேரும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ராஜபட்சே - பொன்சேகா இருவரும் கூட்டணி அமைத்தனர். வெற்றி பெற்றனர். வெற்றிக்குப் பரிசாக ஃபொன்சேகாவுக்கு பதவி உயர்வு வழங்கினார் ராஜபட்சே.

பதவி உயர்வின் மூலம் நட்பு இறுகும் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த இடத்தில்தான் இருவருக்குமே விரிசல் தொடங்கியது. ஆம். ராணுவத் தளபதி என்ற பழைய பதவியில் இருந்தபோது தனிக்காட்டுத் தளபதியாக, சர்வ அதிகாரங்களுடன் வலம்வந்து கொண்டிருந்தார். ஆனால் முப்படைகளுக்கும் தளபதி என்ற பதவி உயர்வுக்குப் பிறகு ராஜபட்சேவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபட்சேவுக்குக் கீழே பணிபுரியவேண்டிய நிலை. அதிகாரமற்ற பொம்மைப் பதவியை ஃபொன்சேகாவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதிருப்தி ஆரம்பித்துவிட்டது.

இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஃபொன்சேகாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. மாறாக, கோத்தபய ராஜபட்சேவின் பெயருக்கு அதிகம் வெளிச்சம் தரப்பட்டது. ராணுவம் தொடர்பான செய்திகளில் கோத்தபயாவின் பெயரே முன்னிறுத்தப்பட்டது. இது ஃபொன்சேகாவை மேலும் காயப்படுத்தியது.

தவிரவும், இலங்கையில் பர்வேஸ் முஷாரஃபாக மாறி ராணுவப் புரட்சி நடத்த ஃபொன்சேகா திட்டமிடுகிறார் என்ற செய்தி கசிந்தது. தனக்கு அப்படியொரு திட்டமே இல்லை என்ற நிலையில் வேண்டுமென்றே விஷமச் செய்திகள் பரப்பபடுவதாக நினைத்தார் ஃபொன்சேகா. இதன்மூலம் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கருதினார்.

போதாக்குறைக்கு அவருக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வீரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. அந்த வீரர்களும் தன்னுடைய தேர்வின்படி வராதவர்கள் என்பதால் அவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினார் ஃபொன்சேகா. விடுதலைப் புலிகளை ஒழித்த ஃபொன்சேகாவை வாழ்த்தி ஊடகங்களில் பாடப்பட்ட பாடல்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்ததும் அதிருப்தியை அதிகரித்த உதவியது.

எல்லாமாகச் சேர்ந்து அவரை கடும் அதிருப்தியில் தள்ளியது. பொதுவாக அதிருப்தியில் இருக்கும் மனிதர் என்ன முடிவுசெய்வார்? தன்னைச் சுற்றியிருக்கும் தளைகளில் இருந்து விடுவித்துக் கொள்ள நினைப்பார். ஆனால் ஃபொன்சேகா அப்படிச் செய்யவில்லை. மாறாக, ராணுவ உடையைத் துறந்துவிட்டு புதிய களத்துக்குத் தயாரானார். அவருடைய முடிவு ராஜபட்சேவுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. எப்படி?

ஆயிரத்தெட்டு காரணங்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து பதினாறைத் தேர்ந்தெடுத்து விலாவாரியாக விவரித்து அதிபருக்குக் கடிதம் எழுதினார். இலங்கையில் குற்றவாளிகள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று காரசாரமாக இருந்தது அவருடைய கடிதம். இறுதியாக, முப்படைகளில் தலைவர் என்ற பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும் அறிவித்தார். அவ்வளவுதான். இலங்கை அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துக்கொண்டது.

விரைவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஃபொன்சேகா போட்டியிடக்கூடும். அவருக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது. அதன் காரணமாகவே அமெரிக்கா சென்றுவந்தார். நிறைய யூகங்கள் வந்துகொண்டிருந்தன. செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டபோது பூடகமாகவே பேசினார். இலங்கை, இந்திய, அமெரிக்க ஊடகங்கள் எல்லாமே ஃபொன்சேகாவின் அடுத்த நகர்வைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன.

எல்லாவற்றுக்கும் விடை கொடுக்கும் வகையில் கடந்த வாரம் கொழும்பு நகரில் தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறார் ஃபொன்சேகா. இத்தனைக்கும் அவருக்கு எவரும் எந்த இடத்தையும் வாடகைக்கோ, சொந்தத்துக்கோ தரக்கூடாது என்று மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அலுவலகம் திறந்துவிட்டார் ஃபொன்சேகா.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக முடித்து ‘வெற்றி நாயகன்' இமேஜைப் பெற்றிருக்கும் ஃபொன்சேகா, தேர்தலில் போட்டியிட்டு அதன்மூலம் நாட்டின் மிக உயர்ந்த பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார். அவருக்கான ஆதரவுத்தளம் எப்படி இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மஹிந்தவுக்கு எதிராகக் களமிறங்குகிறார் என்று முடிவானால் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பது பரவலாக பேசப்படும் விஷயம். ரனில் விக்கிரமசிங்கேவிடம் தொண்டர்பலம் இருக்கிறது. ஃபொன்சேகாவிடம் வெற்றி நாயகன் இமேஜ் இருக்கிறது. இருவரும் இணைவதன்மூலம் ராஜபட்சேவுக்கு தேர்தலில் கடும் நெருக்கடி கொடுக்கமுடியும்.

ரனிலைப் பயன்படுத்தி ஃபொன்சேகா லாபம் ஈட்டப்போகிறாரா அல்லது ஃபொன்சேகாவைப் பயன்படுத்தி ரனில் தன்னுடைய கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரியவரும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது பரபரப்பைப் பற்றவைக்கும் இறுதிச் செய்தி!

0

குமுதம் ரிப்போர்ட்டர் கடந்த இதழில் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன். தற்போது அதிபர் தேர்தலில் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கு தன்னுடைய கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்துள்ளார் ரனில் விக்கிரசிங்கே.

மஹிந்த ராஜபட்சே Vs சரத் ஃபொன்சேகா இடையே யுத்தம் தொடங்கியிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி இதுதான். எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

Friday, November 20, 2009

ஹெட்லி.. ரானா.. பாலிவுட்!

ஹெட்லி மற்றும் ரானா. இந்தியா முழுக்க இந்த இரண்டு நபர்களைப் பற்றித்தான் பேச்சு, சர்ச்சை, விவாதம், பரபரப்பு எல்லாமே. அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து என்கிறார்கள். மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்கிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டனர் என்கிறார்கள். லஷ்கர் ஏ தொய்பா, ஹுஜி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்கிறார்கள். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது இந்த ஹெட்லி - ரானா விவகாரம். தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் பதினைந்து பேருடன் ஹெட்லி நட்பு வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனில், யார் இந்த ஹெட்லியும் ரானாவும்? இவர்களுடைய பின்னணி என்ன?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவரை கடந்த மாதம் அமெரிக்க தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்பதுதான் அவர்மீது சொல்லப்பட்ட முதல் குற்றச்சாட்டு. உட்கார வைத்து விசாரித்தனர். அப்போது முகமது நபியின் படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் ஹெட்லி இருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தாஹாவுர் ஹுஸைன் ரானா என்பவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். பிறகு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வம்சாவளி. நிஜப்பெயர் தாவூத் ஜிலானி. 2006ல் தன்னுடைய பெயரை டேவிட் கோல்மன் ஹெட்லி என்று மாற்றிக்கொண்டார். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டார் என்பதுதான் அமெரிக்க போலீஸார் சுமத்தும் குற்றச்சாட்டு.

ரானா கனடாவைச் சேர்ந்தவர். பூர்விகம் பாகிஸ்தான். ஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ்
என்ற நிறுவனத்தை சிகாகோ மற்றும் டொரண்டோவில் நடத்திவரும் ரானாவுக்கு லஷ்கர் ஏ தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. சிகாகோ, டொரண்டோ உள்ளிட்ட பல இடங்களில் உணவுப்பொருள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனை நிறுவனங்களை நடத்திவருகிறார். ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் பலவற்றுக்குத் திட்டமிட்டவர் என்கிறது எஃப்.பி.ஐ. இருவருமே பாகிஸ்தானில் இருக்கும் ஹசன் அப்துல் மிலிட்டரி கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

விசாரணை தொடரத் தொடர பல அதிர்ச்சியூட்டும் சங்கதிகள் வெளிவரத் தொடங்கின. அதில் இந்தியா குறித்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

1. ஹெட்லி மற்றும் ரானா இருவருக்கும் மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மற்றும் அவர்களை இயக்கிய நபர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. குறிப்பாக லஷ்கர் ஏ தொய்பாவின் தலைவர்கள் மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான இலியாஸ் கஷ்மீரி உள்ளிட்ட சிலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2. மும்பை தாக்குதலை நடத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது 2005ல் இருந்தே ஹெட்லியும் ரானாவும் இந்தியாவுக்குப் பலமுறை வந்து சென்றுள்ளனர். குறிப்பாக, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, புனே என்று பல்வேறு இடங்களில் சிலகாலம் தங்கியிருந்துள்ளார் ஹெட்லி. ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் இவருடைய பங்களிப்பு இருக்கிறது.

2. தெற்கு மும்பையில் சியாம் நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில், சுமார் ஒரு வருடம் ஹெட்லி தங்கி உள்ளார். சிந்தி இனத்தை சேர்ந்த வயதான தம்பதியிடம் தன்னை வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் ஏஜென்ஸி நடத்துபவராக அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்கியுள்ளார். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் மும்பையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் அவருடைய வீட்டில் இருந்து நடக்கும் தொலைவுதான்.

3. புனே நகரில் இருக்கும் ஓஷோ ஆசிரமத்துக்கு இரண்டு முறை ஹெட்லி சென்று வந்துள்ளார். பக்தரைப் போல அமைதியாகச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்குள்ள கோராகோவ் பூங்காவில் தியானம் செய்துவிட்டு வந்திருக்கிறார். நோட்டம் பார்க்கவும் வந்திருக்கக்கூடும்.

4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஹெட்லிக்கு உதவி செய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் இருக்கும் கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்ள சேட்டிலைட் போன்களை அந்த அதிகாரிகள் ஹெட்லிக்குக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்வதற்கு வசதியாக விசா ஏற்பாடுகளை இவர்களே செய்துகொடுத்திருக்க்கூடும்.

5. மும்பை தாக்குதலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தாஜ் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், டிரைடண்ட் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களைப் புகைப்படமாக எடுத்து அப்துல் கஸாப் உள்ளிட்ட பத்து தீவிரவாதிகளுக்குக் கொடுத்துள்ளதில் ஹெட்லி மற்றும் ரானாவுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.

5. இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் கல்பாக்கம், உத்தரப்பிரதேசத்தின் நரோரா, கர்நாடகத்தின் கைகா, குஜராத்தின் காக்ரபார், மராட்டியத்தின் தாராபூர், ராஜஸ்தானின் கோட்டா ஆகிய இடங்களில் இருக்கும் ஆறு முக்கிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இந்திய அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினர். ஹெட்லியும் ரானாவும் சென்றுவந்துள்ளதாகக் கூறப்படும் பல இடங்களுக்கும் நேரில் சென்று புலனாய்வு செய்யத் தொடங்கினர். தற்போது அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்பாக்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடற்படை, கடலோர காவல் படை விமானப்படை வீரர்கள் மற்றும் போலீசார் உள்பட ஏறத்தாழ எழுபது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள தொழில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருக்கின்றனர். மாவட்ட போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்திய காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் களமிறங்கியபிறகு மேலும் சில ரகசியங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. ஆம். ஹெட்லி மும்பையில் தங்கியிருந்தபோது, அவனுக்கும் பிரபல பாலிவுட் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. ஹெட்லி பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் இண்டர்நெட் மையங்களை ஆராய்ந்தபோது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதிகளுக்கு ஹெட்லி அனுப்பிய இ மெயில்களில் ராகுலின் பெயர் இடம் பெற்றுள்ளது.

உடனடியாக மும்பை காவல்துறை ராகுல் பட்டிடம் விசாரணை நடத்தியது. அப்போது உடற்பயிற்சி செய்யும் இடத்தில் தற்செயலாக எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் சில பாலிவுட் நட்சத்திரங்களை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். மற்றபடி, அவருடைய தீவிரவாதப் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார் ராகுல் பட்.

ராகுல் பட்டுக்கும் ஹெட்லிக்கும் பாலமாக செயல்பட்ட ஒருவரையும் போலீஸ் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்திருக்கிறது. ஹெட்லிக்கு உதவியதாக கருதப்படும் சுற்றுலா வழிகாட்டிகள் இருவரிடமும் விசாரணை நடக்கிறது.

மும்பையில் ஹெட்லி தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததே ராகுல் பட் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால் ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதே போன்று ஹெட்லியுடன் தொடர்புடைய மேலும் மூவருக்கு தடை போடப்பட்டு இருக்கிறது.

ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கரன் கபூர், கங்கனா ரனாவத், தாரா சர்மா உள்ளிட்ட பதினைந்து பாலிவுட் நட்சத்திரங்களை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்துவருகிறார்கள். இவர்களுடன் வலுக்ணீட்டாயத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பல நாசகார வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளன. அமெரிக்க அதிகாரிகள் ஒருபக்கம் ஹெட்லி மற்றும் ரானாவிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இங்கே இந்திய அதிகாரிகள் பல இடங்களிலும் பல நபர்களிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை தொடரத் தொடர இன்னும் என்னென்ன பூகம்பங்கள் கிளம்ப்பப்போகிறதோ!